Sunday, August 18, 2013

நாவூரும்மா!


ஆளுர் ஜலால்

(முஸ்லிம் சமூகப் பின்னணியில் நல்ல சிறுகதைகளைப் படைத்தவர்களில் மர்ஹூம் ஆளுர் ஜலால் முக்கியமானவர். “முஸ்லிம் முரசு“ ஆசிரியராகப் பணிபுரிந்த இவர் இளவயதிலேயே இறையடி சேர்ந்து விட்டார். அவருடைய சிறந்த கதைகளில் ஒன்றான இந்தச் சிறுகதையை வாசகர்களுக்குச் சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.)

காலை நீட்டிக் கொண்டு, மடியில் தூளும் இலைகளும் நிரம்பிள தட்டை வைத்துக் கொண்டு, ஆஸ் வைத்து இலையை வெட்டி, தூளை நிறைத்து, சுக்கானால் மடித்துச் சுருட்டி, சிவப்புத் தாரில் நூலைக் கரந்து கட்டி, பீடிகளை அறுவடை செய்து கொண்டிருந்தாள் நாவூரும்மா!

நைந்து கசிந்த தாவணியின் முக்காட்டு முகட்டில் கருத்த மயிரிழைகள் பாவிரித்திருந்தன. கைகளின் சுருட்டல், மடக்கலில் விழுந்து கொண்டிருந்த பீடிகளைப் போலவே நெஞ்சிலும் சில எண்ணச் சுருட்டல்கள்!

'பிளெ நாவூரு! இந்தக் கஞ்சியெக் குடிச்சிட்டுப் போவன்ப்ளெ!'

'இப்ப பசிக்கலே, கொஞ்சம் கழிச்சுக் குடிக்கிறேன்!'

ம்மாவுக்குப் பதில் சொல்வதற்காக கைகள் வேலையை நிறுத்தவில்லை. உதடுகள் மட்டும் மூடி மூடிப் பிரிந்தன, வார்த்தைகளுக்காக.

'இன்னும் ரெண்டு பலவை போட்டா, ஒரு சாம்பு அறுத்து விடலாம்!' ம்மா பாவிரித்து காக்குழியில் இறங்கி ஓடத்தைச் சுண்டினாள்.

'சல்லக்.... புல்லக்....'

மிதியடிக் கட்டைகளின் இடமாற்றலில் தறியின் சங்கீத நாதம், இனி ம்மா சத்தம் போட்டாலும் தறிச் சத்தத்தில் அது கேட்காது!

நாவூரும்மா காலை லேசாக மடக்கி நீட்டிய போது, ஒரு சொடக்குச் சத்தம். கொஞ:சம் ஆசுவாசமாகத்தான் இருக்கிறது. மீண்டும் மீண்டும் மனத்தில் மட்டும் அந்த எண்ணப் பாரம். நினைவில் கரைக்க எத்தனிக்கிற போதெல்லாம் 'அவ'னுடைய பார்வைதான் தெரிகிறது.

அவன் நேற்று இந்தத் தெருவழியாகத்தான் போனான். பெயர் எதுவென்று தெரியாது. தலையை நெளிவைத்துச் சீவிக்கொண்டு, மடிப்புக் கலையாத ஒரு வெளிநாட்டுச் சட்டையைப் போட்டுக் கொண்டு பெனிடிங் பூப்பொட்ட வெள்ளை லுங்கியைக் கரண்டைக்குக் கீழே கட்டிக் கொண்டு வந்தானே அவன் முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும். அவன் நடந்த இடமெல்லாம் குப்பை ஒதுங்கி விட்டது. தலையில் தொப்பியோ முகத்தில் தாடியோ வைத்திருந்தால் அவனை அடையாளம் கண்டிருக்கலாம். தாடியும் மீசையும் இல்லாத முகத்தில் அவன் பொட்டு வைக்காமலிருந்தானே அது போதும்! அவன் ன் முற்றத்தில் நின்று சிரித்தான்? நாவூரும்மாவின் கைகள் பத்து பீடிகளைச் சுற்றுகிற நேரத்தில் ஒரு பீடியைக் கூட இன்னும் சுற்றி முடிக்கவில்லை.

கட்டம் போட்ட கட்டிச் சாயமுள்ள தறிச் சாம்பை உடுத்துக் கொண்டு - தோளில் வெறும் துவர்த்தைப் Nபுhட்டுக் கொண்டு - திட்டுத்திட்டான அழுக்கில் சட்டையைத் தூக்கிப் Nபுhட்டுக் கொண்டு - பல ரகமான ஆம்பிள்ளைகள். தெருவில் போவதும் வருவதுமாயிருக்கிற அத்தனை பேரிலும் நேற்று வந்தானே.. அவன் மட்டும்தான் பளிச்சென்று தெரிகிறான்.. சீச்சீ....! என்ன நினைப்பு இதெல்லாம்?

நாவூரும்மாவின் விரல் அசைவில் பீடிகள் பயிராகிற போது, பார்வை மீண்டும் தெருவில் மேய்கிறது!

நேற்று ராத்திரி நடந்து முடிந்த ஜொஹரா வீட்டுக் கல்யாணப் பந்தல் ரோஜாப்ப_வும் பிச்சிப்பூவும் கலந்த கட்டிய பெரிய பூமாலையைக் கழுத்தில் சுமந்து கொண்டு, கசவுக்கரை போட்ட எட்டு முழ வேட்டியும் சட்டையுமாய் தெருவில் தெருவில் நடந்து வந்த மாப்பிள்ளை ஜொஹராவை என்ன செய்திருப்பான்?

விட்ட குறை, தொட்ட குறை இல்லாமல் எல்லாக் குடும்பக்காரர்களையும் சேர்த்து வைத்து ஸஹனில் சோறு போட்டு கறியாணம் ஊற்றி, ஐந்தைந்து பேராய்ச் சாப்பிட்டுப் போவதற்குத்தான் கல்யாணமா? படி அரிசி ஏழு ரூபாய். இதற்கெல்லாம் ஜொஹராவின் வாப்பாவிடம் ஏது பணம்? எப்படியோ அவர் வீட்டில் ஒரு குமர் கரையேறிவிட்டது.

கரையேறா மன நினைவுகள் நாவூரும்மாவின் மனக் குளத்தில் நீச்சலடிக்கின்றன.


மர்ஹூம் ஆளுர் ஜலால்
(படம் - நன்றி டாக்டர் ஹிமானா செய்யித்)

'நாவூரும்மா...! நாவூரும்மா...!'

அவள் திரும்பிப் பார்க்காமலே அந்தக் குரலுக்குரியவன் அடுத்த வீட்டு மைதீன் காஜாதான் என்று அடையாளம் கண்டு கொண்டாள். 'அவனுக்கு வேற வேலையில்லை. பொழுது விடிஞ்சு பொழுது போனா... நாவூரும்மா... நாவூரும்மாதான் அவனுக்குப் பழக்கம். பேசுறதுக்கு வேற ஆள்... ' அலுத்துக் கொண்டாள்.



ஒரு கையை லேசாக மடக்கிச் சாய்த்துக் கொண்டு, திறந்த உதடுகளின் வழியே ஒழுகிக் கொண்டிருக்கும் வாணியை நெஞ்சில் வடிய விட்டுக் கொண்டு சொத்தையாகிக் கறுத்த பற்களின் விரிப்பில் பாசி படர்ந்த சிரிப்பை சிந்திக் கொண்டு கோணல்மாணலாக வந்து விழுந்தான் மைதீன் காஜா. நாவூரும்மா வூட்டுத் தரையில் படுத்துப் புரண்டால் அப்படியொரு சுகம் அவனுக்கு!

அழுக்குப் படிந்த கறுப்புத் தோலின் இடைக்கும் முட்டுக்கும் நடுவே ஜன்னல்கள் பதித்த திரை விரிப்பு. அவனது பாஷையில் அதற்குப் பெயர்தான் வேட்டி! அவன் அசமந்தம்தான். என்றாலும் அந்தத் தெருவில் யார் என்ன வேலை சொன்னாலும் தட்டாமல் செய்து முடிப்பான். ஊரைப் பொறுத்த மட்டில் அவன் பைத்துல்மால் சொத்து!

'லே மைங்காஜா, உமர் டீ ஓட்டல்ல போயி ஒரு சாயா வாங்கிட்டு வருவியா?'

ம்மா ஒரு அலுமினிய கிளாஸையும் இருபது காசையும் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள். வாங்கிக் கொண்டு நொட்டி நொண்டி ஓடினான் மைதீன் காஜா. அவன் நடக்கிறானா ஓடுகிறானா என்று பிரித்துப் பார்க்க முடியாத நடையழகு! அவன் போவதைப் பார்த்;த பொழுது நாவூரும்மாவின் உதட்டுக் கதவை ஒருச்சாய்த்துக் கொண்டு புன்னகை எட்டிப் பார்த்தது. அவள் தலையைக் குனிந்து கொண்டு மீண்டும் பீடி சுற்றுவதில் முனைந்தாள்.

'வீட்டிலெ யாரும்மா இருக்கிறது?'

நாவூரும்மா நிமிர்ந்து பார்த்தாள்.

தலையை நெளிவைத்துச் சீவிக் கொண்டு, மடிப்புக் கலையாத ஒரு வெளிநாட்டுச் சட்டையைப் போட்டுக் கொண்டு.... அவனேதான். கையில் சில பேப்பர்கள். திறந்திருக்கும் பேனா. உதட்டில் அதே சிரிப்பு.

அப்போதும் அவளுக்கு உள்ளே எழுந்து போக வேண்டும் என்று தோன்றவில்லை.முக்காட்டை மட்டும் சரியாக இழுத்துப் போட்டுக் கொண்டாள்.

'ப்ளெ ம்மா!... இந்தா யோரோ வந்திருக்கா...'

தறிச் சத்தம் நின்றது. ம்மா காக்குழியிலிருந்து கரையேறி வந்தாள். தலையில் முக்காடு போட்டுக் கொண்டு, 'என்ன!' என்று அமல்லிய கேள்வி.

தெருவில் பாண்டி விளையாடிக் கொண்டிருந்த சின்னஞ் சிறிசுகள், நாவூரும்மா வீட்டுக்கு யாரோ விருந்தாளி வந்திருக்கிறாரென்ன கணிப்பில் ஓடி வந்தனர். அக்கம் பக்கத்துத் திண்ணைகளில் சுவரோரம் சாய்ந்து கொண்டும் தூணில் சாய்ந்து கொண்டும் பீடி சுற்றிக் கொண்டிருந்த பெண்களின் பார்வையெல்லாம் இங்கே, நாவூரும்மாவின் வீட்டைக் குறிபார்த்தது.

அப்படி அவர்களெல்லாம் பார்ப்பதைக் கண்டு நாவூரும்மாவின் முகத்தில் இனம் புரியாத ஒரு பூரிப்பு.

அவன், ம்மாவிடம்தான் பேசுகிறான்.

'நான் வோட்டர் லிஸ்ட் எடுக்க வந்திருக்கிறேன்மா... உங்க வீட்ல உள்ளவங்க பெயரையெல்லாம் சொல்றீங்களா?'

ம்மாவின் முகத்தில் அந்த 'வோட்டர் லிஸ்ட்' பாஷை புரியாமல் சிறு தயக்கம். 'இவர் எடுக்கிறதுக்கு இங்க என்னயிருக்கு. இல்லையென்று சொல்ல வேண்டியதுதான்!'

'எங்க ஊட்லெ குடுக்கிறதுக்கு ஒண்ணுமில்லையே..!'

ம்மாவின் பேச்சைக் கேட்டு அவன் சிரித்தான். விளங்காமல் பேசுகிற ம்மாவின் தற்குறித்தனத்தை எண்ணி நாவூரும்மாவுக்கு ஆத்திரம் வந்தது.

'பிளே  ம்மா நீ பெசாம இரு!' - கொஞ்சம் மிகைப்பட்ட அதட்டல். இவள் கொஞ:சம் படித்தவளாயிருப்பாளோ? - அவன் நினைப்பு!

நாவூரும்மா சொன்னாள்:- 'வீயாத்து எங்க ம்மா பேரு!'

அந்தப் பதிலிலேயே அவன் நாவூரும்மாவின் படிப்பறிவைப் புரிந்து கொண்டான். வோட்டர் லிஸ்டில் 'பீவி பாத்திமா' என்று குறித்தக் கொண்டான்.

'உங்க பேரு?'

'நாவூரும்மா!'

அவன் சிரித்துக் கொண்டே அவள் பெயரை மட்டும் அப்படியே எழுதிக் கொண்டான்.

'உங்க வாப்பா பேரு?'

இந்தக் கேள்வியில் அவளும் புரிந்து கொண்டாள். 'அவனும் ஒரு முஸ்லிம்தான்!'

'வாப்பாமௌத்தாப் போயி நாலு வருஷமாச்சி... பேரு சொல்லணுமா?'

'வேண்டாம். அப்ப நீங்க ரெண்டே பேர்தானா?'

'இப்ப ரெண்டு பேர்தான். யாராவது என்னைக் கல்யாணம் முடிச்சிட்டுப் போய்ட்டா... ம்மா மட்டும்தான் மிச்சம்..!' அவள் நினைத்தாள். அவனிடம் சொல்லவில்லை. ஒரு ஆம்பிள்ளையிடம் இதையெல்லாமா சொல்லிக் கொண்டிருக்க முடியும்.

'நாவூரும்மா... நாவூம்மா... இவரு யாருளா?'

சுடச்சுட வாங்கிய சாயாவை கிளாசில் அலசிக் கொண்டே படியேறிய மைதீன் காஜாவின் கேள்வி, நாவூரும்மாவுக்குச் சங்கடத்தைக் கொடுத்தது. இவன் என்ன எளவுக்கு இப்ப வந்தான்?

அவனிடமிருந்து சாயா கிளாஸை வாங்கிக் கொண்டு ம்மா பதில் சொன்னாள்:-

'இவ்ரு ஓட்டு எடுக்கிறதுக்கு நிக்கிறவரு!'

மைதீன் காஜா எல்லாம் புரிந்து கொண்ட மாதிரி மொட்டைத் தலையை வேகமாக ஆட்டி, கையை ஒரு தூக்குத் தூக்கிப் பலமாகச் சிரித்த போது வந்திருந்தவன் கொஞ்சம் பயந்து விட்டான்.

நாவூரும்மா அவன் பயத்தைத் தெரிந்து கொண்டு சூசகமாகச் சொன்னாள்:-

'மைதீன் காஜா ஒரு மாதிரி!'

'உங்க பேரு என்னங்க?'

ம்மா இப்படியுமா கேள்வி கேட்பாள்? நாவூருக்கு ஆச்சரியமன்றாலும் அவன் பெயரைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில் ஓர் ஆர்வமும் உண்டு. இந்த எண்ணமெல்லாம் எப்படி மனதில் கருவேறுகிறது?

'என் பேரு அப்துல் காதர். ஊர் வள்ளியூர். வாத்தியார் வேலை பார்க்கிறேன்!'

ம்மா கேட்டதற்கும் மேலாகவே அவன் பதில் சொல்லிவிட்டுப் புறப்படப் போனான்.

'கொஞ்சம் சாயா குடிச்சிட்டுப் போங்களேன்..'

அவன் பெயர் தெரிந்த பிறகு ம்மாவுடைய வார்த்தைகளிலும் உபசரிப்பிலும் பெருமிதம். அடுப்பில் வெந்து கொண்டிருக்கிற மரச் சீனிக் கிழங்கில் ஒரு துண்டு எடுத்துக் கொடுக்கலாமா என்று யோசித்தாள். அப்படிக் கொடுத்தால் அரிசி வாங்கக் காசில்லையென்று எண்ணிக் கொள்வானோ? அவள் சாயா கிளாஸை மட்டும் நீட்டினாள்.

அவன் சாயாவை வாங்கிக் குடித்து விட்டு 'போயிட்டு வர்ரேங்க..' என்று சொல்லி விட்டு அடுத்த வீட்டுக்குப் போனான்.

நாவூரும்மாவுக்கும் ஆசைதான்! அடுத்த வீட்டுக்குப் போகலாமா? அவன் ஏதாவது நினைத்துக் கொள்ளப் போகிறான். அவள் பீடியைச் சுற்ற அலையை விரித்தாள். இலையைப் போலவே மனமும் விரிந்தது.

அப்துல் காதர். அழகான பெயர்தான். வாத்தியார் வேலை. நிறைய லீவு கிடைக்கும். இவரைக் கட்டிக்கிட்டா நிறையப் பேசலாம். இவரெல்லாம் பெண் கேட்டா பணம் வச்சுக் கேட்கமாட்டாரு. ஆளைப் பார்த்தா அப்பிடித்தான் தெரியுது.

'ஊரிலே மட்டும் கட்டுப்பாடு. நூத்தி ஒரு ரூவாவுக்கு மேல் பணம் வச்சுக் கொடுக்கக் கூடாதுன்னு. கொடுக்கிறவன் கொடுக்காமலும் எடுக்கிறவன் எடுக்காமலுமா இருக்கிறானுவ... எல்லாம் சும்மா...! இந்த வாத்தியாரெப் போல உள்ளவங்க - படிச்சவங்க - விவரம் புரிஞ்சவங்க - வீட்டிலே உள்ளவங்கள்ட்ட சொல்லி எதுவுமே வாங்காமெ ஏழைக் குமர்களை நிக்காஹ் செய்றதுன்னாத்தான் சரிப்பட்டு வரும். கட்டுப்பாடு போட்டு என்ன பிரயோஜனம்?'

'இந்த வாத்தியார் சிரித்தது கூட இந்தப் பொருளில்தானோ?' நாவூரும்மாவின் பேதமைத்தனமான முகப் பூச்சில் கருவேறிய வெள்ளைச் சிரிப்பு. வெட்கம்தான். விலகிப் போயிருந்த தாவணியை இழுத்து விரித்துக் கொண்டாள். முகத்தில் பொங்கி வடிகிற சிரிப்பை - நெஞ்சில் பொங்கி வழிகிற தாபத்தை - எதால் இழுத்து மூடுவது?

அந்த வாத்தியார் பின்னாலேயே வீடு வீடாய் ஏறி இறங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளில் எதிர் வீட்டு மீராம்மா மட்டும் அடுத்த வீட்டுக்கார அம்மாவின் விசாரிப்புக்கு அந்த வாத்தியார் சொன்ன பதிலை நாவூரும்மாவிடம் அக்கறையோடு சொன்னாள்.

'தாத்தா.. அந்த வாத்தியாரு ஒரே தடவையில ரெண்டு பிள்ளை பெத்தாராம்... எப்பிடி தாத்தா அது?'

குழந்தைத்தனமான அவளுடைய கேள்வி நாவூரும்மாவைச் சிரிக்க வைப்பதற்குப் பதில் சற்று அதிர வைத்தது.

இந்த அதிர்ச்சி ஏன்? நெஞ்சில் 'அந்த' உணர்ச்சி ஏன்? நாவூரும்மாவின் கண்களில் தூசி படியா நீர்ச் சொட்டுக்கள். மறைக்கிற பார்வையில் வெறும் பீடி இலைகளும் தூளும் ஆஸூம் சுக்கானும்தான்!

'நாவூரும்மா... நாவூரும்மா...!'

அலுப்புச் சலிப்பில்லாமல் மைதீன் காஜாவின் வாயில் மட்டும் அவள் பெயரின் உச்சரிப்பு.

அவனும் ஆம்பிள்ளைதானே! முளைவிடுகிற மனத்தின் விரிசலில் இலை விரிக்கிற நினைவுகள்.

'ம்மா...!'

எப்படிச் சொல்வது வெட்கமில்லாமல்! குரல் தேய்ந்து ஒடுங்குகிறது. மைதீன் காஜாவைப் பார்க்கிறாள்.

ஒரு கையை லேசாக மடக்கிச் சாய்த்துக் கொண்டு திறந்த உதடுகளின் வழியே ஒழுகிக் கொண்டிருக்கும் வாணியை நெஞ்சில் வடிய விட்டுக் கொண்டு, சொத்தையாகிக் கறுத்த பற்களின் விரிப்பில் பாசி படிந்த பாசி படிந்த சிரிப்பைச் சிந்திக் கொண்டு...

நாவூரும்மா மடியில் இருந்த பீடித்; தட்டைக் கீழே எடுத்து வைத்து விட்டு மடியை உதறிக் கொண்டு உள்ளே போனாள்.

'உமர் டீ ஓட்டல்ல போயி ஒரு சாயா வாங்கிட்டு வருவீங்களா..?'

அந்த 'ங்களா'வில் ஓர் அழுத்தம். அலுமினியத் தம்ளரையும் 20 காசையும் கொண்டு வந்து கொடுத்தாள் நாவூரும்மா. வாங்கிக் கொண்டு நொண்டி நொண்டி ஓடினான் மைங்காஜா.

அவன் பார்வையிலிருந்து மறைந்த பின்னர், நாவூரும்மாவின் குரலில்:-

'ம்மா...?'

தறிச்சத்தம் நின்றது.

'என்னளா?'

'எனக்கு எத்தனை வயசும்மா ஆவுது?'

'மைதீனான்டவஹ பொற பொறந்தா இருவத்தெட்டாவும்.. இப்ப ஏன்ப்ளெ அதக்கேக்குறெ?'

'சும்மத்தான்!'

உதடுகளின் வெடிப்புக்கிடையே வார்த்தைகள் சிதறுகின்றன.

'என்னளெ சும்மா?'

ம்மா காக்குழியிலிருந்து வெளியேறினாள். கன்னிப் பருவத்திலிருந்து இன்னும் கரையேறாத நாவூரும்மா சட்டெனச் சொல்லி விட்டாள்:-

'எனக்கு மைங்காஜாவை... சும்மா... செலவேயில்லாமெ... கல்...'

சாவூரும்மாவின் வார்த்தைகள் 'கல்'லிலேயே முட்டி நின்று விட்ட போது ம்மாவின் நெஞ்சிலும் ஒரு பெரிய 'கல்' வந்து மோதியது.

இந்த துக்கே ஏன் இப்பிடிப் பேசுது? அவள் சுவரோரம் நின்ற மகளைப் பார்த்துக் Nகுட்டாள்:-

'ஏம்ப்ளெ இப்பிடியெல்லாம் பேசுறே... உனக்கென்ன பயித்தியம் கியித்தியம் பிடிச்சிப் போச்சா? போய் வேலயப் பாரு... ஆக்கங்கெட்ட கூவெ.. அந்த மைங்காஜா என்ன மாயத்துக்கு இங்கெ வாறான்?'

ம்மாவின் வார்த்தைகளில் நெருப்பில்லாமலே கடும் சூடு. இனி ஒரு வார்த்தை மறுத்துப் பேசினால்... தோலைப் பிச்சி எடுத்திடுவா!

நாவூரும்மாவின் தொண்டைக் குழியிலேயே புதையுண்டு போய்விட்ட வார்த்தைகள் எண்ணத்தில் மேலாடின.

'ஊருல உள்ளவனுவ கெட்டிக்கிறதுக்கு பணம் கேக்கிறானுவோ... தெருவுல போற எவனாவது கட்டிக்குவானான்னு பார்த்தேன்... ஒருத்தன் வந்தான். அவனும் ரெண்டு பிள்ளைக்காரன். மைங்காஜாவையாவது கட்டிக்காம்னு பார்த்தேன்... ம்மாவும் கவுறவம் பாக்குறா...!'

போன வருஷம் அடுத்த தெரு ஹமீதுக்குப் பேசி வந்து, இந்த வருஷம் மூணாந்தெரு இஸ்மாயிலுக்குப் பேசி வந்து, அந்தச் சம்பந்தங்கள் எல்லாமே  பணத்தட்டுப்பாட்டில் உதிர்ந்து போன மணச் சருகுகள்.

அடுத்த வருஷம்... அதற்கடுத்த வருஷம்... இன்னும் மூணு வருஷம் போனால் அரைக் கிழவி! அப்புறம் ஒரு அஞ்சு வருஷத்தில் நரை பழகி, நடை தளர்ந்து, ஈசைகளில் கூன் விழுந்து... இளமை வெறும் கறையான் புற்றாகி விடும். அப்புறம் வாழ்க்கை...! ஹூம்!!

நாவூரும்மாவின் விழியோரங்களில் கண்ணீர் மழை!

சாயா கிளாசைக் கொண்டு வந்து வைக்கிறான் மைங்காஜா.

'லே மைங்காஜா... நீவூட்டுக்குப் போ! இனிமே இங்க வரப்புடாது...!'

ம்மா வெளியே வந்து மைங்காஜாவை விரட்டி ஓட்டுகிறாள். விரட்டலுக்குக் காரணம் புரியாமலே அவன் நொண்டி நொண்டி ஓடுகிறான்.

காலை நீட்டிக் கொண்டு, மடியில் தூளும் இலைகளும் நிரம்பிள தட்டை வைத்துக் கொண்டு, ஆஸ் வைத்து இலையை வெட்டி, தூளை நிறைத்து, சுக்கானால் மடித்துச் சுருட்டி, சிவப்புத் தாரில் நூலைக் கரந்து கட்டி, பீடிகளை அறுவடை செய்து கொண்டிருந்தாள் நாவூரும்மா!

(நன்றி :- மினாராக்கள் நிமிர்ந்து நிற்கின்றன - சிறுகதைத் தொகுதி - ஆளுர் ஜலால் - 1977)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: